வால்பாறையில் கனமழை சோலையார் அணை நிரம்பியது. ஆறுகளில் வெள்ளம், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

கோவை 11.07.22:

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பொழிந்து வருகிறது. இதனால் கோவை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள அணைகள் விரைவாக நிரம்பி வருகின்றன.வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.தொடர் மழையால் வனப்பகுதிக்குள் புதிதாக நீர்வீழ்ச்சிகளும் உருவாகின.

இதனை அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.தொடர்மழையால் வெள்ளிமலை டனல் ஆறு, நடுமலை ஆறு, கூழாங்கல் ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், ஆற்றுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் சுற்றுலா பயணிகள் ஆற்றில் இறங்கி குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சோலையார் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து, தற்போது அணையின் முழு கொள்ளளவான 160 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 4,377 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,413 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணை இன்னும் திறக்கப்படவில்லை. 164 அடியை எட்டியதும் அணையை திறந்துவிடப்படும் என்றும், தொடர்ந்து அணையின் நீர்மட்டத்தை கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாநகர் பகுதிகளிலும் இன்று காலை முதலே இதமான காலநிலை நிலவியது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது.இதேபோல் புறநகர் பகுதிகளான பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *