28.07.22:
click for live video
கோவை கொடிசியா வளாகத்தில், 6 வது புத்தகத் திருவிழா ஜுலை 22 ம் தேதி துவங்கி 31ம் தேதி வரை நடைபெறும். வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில், நாள்தோறும் பல விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவ, மாணவியர்கள் 5 ஆயிரம் பேர் திருக்குறள் திரள் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தில் இருந்தும் 2 குறள்கள் என 20 குறள்களை அனைத்து மாணவ மாணவிகளும் திரளாக வாசித்தனர். மாணவர்களிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்கு விக்கும் விதமாக திருக்குறள் திரள் வாசிப்பு நிகழ்ச்சியானது, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த திருக்குறள் திரள் வாசிப்பில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் தமிழறிஞர்கள், புத்தக கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ”புத்தகத் திருவிழாவில் 250 க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. புத்தகத் திருவிழாவில் சிறப்பான நிகழ்வுகள் தினமும் நடத்தப்படுகின்றது. மாணவர்கள் புத்தகத் திருவிழாவை பார்வையிடவும், ஒரு புத்தகம் வாங்கி வாசிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் கொடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

காவி நிறத்தில் திருவள்ளுவர் படம் இருப்பது குறித்த கேள்விக்கு, ”அது தவறான கருத்து. அது பார்வை குழப்பம் என்று சொல்லாம். திருக்குறள் புத்தகத்தின் சட்டை நிறத்தை பார்க்கவில்லை. அதில் உள்ளே என்ன இருக்கின்றது என்று தான் பார்க்கின்றேன்” எனப் பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *