பொது கழிப்பிடத்தை பராமரிக்காத இன்ஜினியருக்கு மெமோ. மாநகராட்சி கமிஷனர் வழங்கினார். பொதுமக்கள் குற்றச்சாட்டு எதிரொலி.

கோவை. நவம்பர். 16-

கோவை மாநகராட்சியில், பொதுக்கழிப்பிடத்தை சரியாக பராமரிக்காத இளநிலை பொறியாளருக்கு ‘மெமோ’ வழங்க, கமிஷனர் ராஜகோபால் உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சி, 10வது வார்டு, கருணாநிதி நகரில் உள்ள பொதுக்கழிப்பிடம் சரியாக பராமரிக்கப்படுகிறதா என, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, அப்பகுதி பொதுமக்களிடம் அவர் பேசியபோது, ‘தெருவிளக்கு எரிவதில்லை.

கழிவுநீர் வெளியேறுவதில்லை. கழிப்பறை பயன்படுத்த தண்ணீர் இல்லை’ என, பகிரங்கமாக குற்றஞ்சாட்டினர்.

மோட்டார் பழுதாகி, தண்ணீரின்றி, பராமரிப்பு இல்லாமல் உள்ள பொதுக்கழிப்பிடத்தை பார்வையிட்ட கமிஷனர், பராமரிப்பு செலவுக்கு எப்படி பில் எழுதப்படுகிறது என கேள்வி கேட்டார்.

இப்பிரச்னையில், இளநிலை பொறியாளர் ஹரிக்கு ‘மெமோ’ வழங்க உத்தரவிட்டார்.

பின், ராமசாமி வீதி, எம்.ஜி.ஆர்., மார்க்கெட் பின்புறம் மக்கும் குப்பையில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை பார்வையிட்ட கமிஷனர், அதன் செயல்பாடுகளை கேட்டறிந்து, அறிவுரை வழங்கினார்.அப்போது, உதவி நிர்வாக பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் சண்முகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்