விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோர்ட்டில் மனுதாக்கல்.
06.12.21:
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் மீது, கிரிமினல் அவதுாறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோரி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் மகா காந்தி. இவர், அதே பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு விபரம்:
மருத்துவ பரிசோதனைக்காக, கர்நாடக மாநிலம் மைசூருக்கு, நவம்பர் 2ல் சென்றேன். அப்போது, பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்தேன்.அவரின் நடிப்பு திறன், சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தேன்.
வாழ்த்துக்களை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி, பொது வெளியில் என்னை இழிவுப்படுத்தியும், ஜாதி பெயரை குறிப்பிட்டும் பேசினார்.
நான் விமான நிலையத்திற்கு வெளியே வந்த பின், தன் மேலாளர் ஜான்சனை ஏவி விட்டு, கன்னம் மற்றும் காது உள்ளிட்ட இடங்களில் தாக்கினார்.டாக்டர்கள் பரிசோதித்ததில், என் செவித்திறன் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.எனவே, விஜய் சேதுபதி மற்றும் ஜான்சன் மீது, கிரிமினல் அவதுாறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.