ஆகஸ்ட் 12 அவினாசி-அத்திக்கடவு திட்ட அலுவலகம் முற்றுகைப் போராட்டம்.
27.07.22:
  அவினாசி சேவூர் ரோட்டிலுள்ள கொங்கு கலையரங்கில் பாஜக மற்றும் அவினாசி-அத்திக்கடவு திட்ட போராட்டக்குழு நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.அக்கூட்டத்தில் அரசின் மெத்தனத்தால் அத்திக்கடவு திட்டம் திட்டமிட்டபடி முடிக்காமல் காலதாமதமாவதைக் கண்டித்து ஆகஸ்ட் 12-ம் தேதி காலை 10 மணிக்கு அவினாசியிலுள்ள அவினாசி-அத்திக்கடவு திட்ட மேற்பார்வை பொறியாளர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை பெருந்திரளாக முற்றுகை போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. 

இதுகுறித்து பாஜக விவசாய அணி மாநில தலைவர் திரு.G.K.நாகராஜ் பேசியதாவது:- விவசாயிகளின் 60  ஆண்டுகால போராட்டத்திற்குப்பிறகு முன்னாள் முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பதவியேற்றபொழுது ரூ.1,756.88 கோடி செலவில் திட்டத்திற்கு 28.02.2019-ல் அடிக்கல் நாட்டி பணிகளைத் துவக்கினார்.பவானி ஆறு காவிரியாற்றில் கலக்கும் காலிங்கராயன் அணைகட்டு பகுதியிலிருந்து குழாய் மூலமாக நீரைக்கொண்டுவந்து,மோட்டார் பம்புகள் உதவியுடன் நீரேற்று நிலையங்கள் அமைத்து ஈரோடு,திருப்பூர்,கோவை மாவட்டங்களிலுள்ள  1045 சிறிய,பெரிய குளம்,குட்டைகளில் 1.5 TMC  நீரை நிரப்பி,அதன்மூலம் 24,468 ஏக்கர் விவசாய நிலங்களை பாசனம் பெறச்செய்வது திட்டத்தின் நோக்கம்.இதற்காக ஆறு இடங்களில் நீரேற்று நிலையங்கள் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டன.இதில் மிகமுக்கியமாக  உயரமான, வறட்சிப்பகுதியான அவினாசியிலுள்ள பத்துக்கும் மேற்பட்ட பெரிய குளங்களில் நீர் நிரப்பப்பட உள்ளது.கொரோனா காலத்தில் கூட ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டபொழுது அன்றைய திரு.எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு ஒரிசா,பீகார் போன்ற பகுதிகளிலிருந்து தனிவிமானத்தில் பொறியாளர்களையும்,வேலையாட்களையும் அழைத்துவந்து,தடையின்றி திட்டப்பணிகளை நிறைவேற்றி வந்தது.

ஆனால் திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது.தற்போதைய நிலையில் 96.5%  பணிகள் முடிந்த நிலையில் போதுமான நிதியும் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வெறும் 4 கி.மீ  தூரத்திற்கு முள்ளம்பட்டி,நல்லகவுண்டம்பாளையம் மற்றும் காளிங்கராயன்பாளையம் நிலஉரிமையாளர்களுக்கு நிதிவழங்க அரசாணை வழங்காததால் கடந்த மூன்று மாத காலமாக  பணி  தடைபட்டு நிற்கிறது.பதிக்கப்படவேண்டிய மொத்தக்குழாய்களின் நீளம் 1058 கி.மீ.இவற்றில்  1054 கி.மீ முழுமையாக பதிக்கப்பட்டுவிட்டது.மேற்கூறிய 4 கி.மீட்டர் குழாய் பதிக்கப்படாத காரணத்தால்  ரூ.1,756.88 கோடியில் நிறைவேற்றப்பட்ட  திட்டம் தடைபட்டு நிற்கிறது.

2021 ஜனவரி  பொங்கல் தினத்தில் பணி முடிக்கப்பட்டு,பயன்பாட்டிற்கு வரவேண்டிய திட்டம் திமுக அரசின் ஒரு  அரசாணையால் தடைபட்டு நிற்கிறது.திட்டமிட்டபடி திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் கடந்தாண்டு காவிரியாற்றில் 30 TMC தண்ணீர் உபரியாக சென்றபோது அதைக்கொண்டு மேற்கண்ட மூன்று மாவட்டங்களில் குளம்,குட்டைகளை நிரப்பியிருக்க முடியும்.கீழ்பவானி வாய்க்காலில் கான்கீரிட் திட்டத்தை துவக்க துடிக்கும்   திமுக அரசு 96.5% முடிந்துவிட்ட அவினாசி-அத்திக்கடவு திட்டத்திற்கு தடைபோட்டு,தள்ளிப்போடுவது  விவசாயிகளுக்கு செய்யும் துரோகமாகும்.

எனவே இதுகுறித்து கடந்த 3 மாதங்களுக்கு தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும்,இதுவரை நிலஉபயோகத்திற்கான அரசாணை விவசாயிகளுக்கு வழங்கப்படாததால் பணி தடைபட்டு நிற்கிறது.இன்னும் ஒரு மாதத்திற்குள் வேலை முடிக்கப்படாவிட்டால் இந்தாண்டு பருவமழையை பயன்படுத்தி குளம்,குட்டைகளை நிரப்பமுடியாத நிலைமை ஏற்பட்டுவிடும்.எனவே முடிவுக்கு வந்த 60 ஆண்டுகால அவினாசி-அத்திக்கடவு போராட்டத்தை மீண்டும் துவக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இக்கூட்டத்திற்கு பாஜக விவசாய அணி மாநில தலைவர் திரு.G.K.நாகராஜ் தலைமை தாங்கினார்.அவினாசி-அத்திக்கடவு போராட்ட நிர்வாகிகள் திரு.வெள்ளியங்கிரி,தரவலூர் திரு.சம்பத், திரு.தங்கமுத்து, திரு.சுப்ரமணி,மூத்த போராளிகள் திரு.அவினாசி பொன்னுக்குட்டி, திரு.வேலுச்சாமி உள்ளிட்ட போராட்டக்குழு உறுப்பினர்கள்,பாஜக நகரத்தலைவர் திரு.தினேஷ்,மாவட்ட நிர்வாகிகள், விவசாய அணி மாவட்ட தலைவர்கள் பங்கேற்றார்கள்.   

       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *