தரிசு நிலங்களில் சாகுபடி விவசாயிகளுக்கு அழைப்பு.
கோவை 27.07.22:
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் அனைத்து கிராமங்களும், வேளாண் வளர்ச்சி மற்றும் தன்னிறைவு அடைய, ஊரக வளர்ச்சி துறை உடன் இணைந்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது.தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரும் வகையில், தொகுப்பு தரிசு நிலங்களில் நீர் ஆதாரம் உருவாக்குதல், சாகுபடிக்கு உகந்த நிலமாக மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டம் இதில் வகுக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில், கோவை மாவட்டத்தில் 56 ஊராட்சிகள் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.தரிசு நிலமுள்ள 8 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து, 15 ஏக்கர் தரிசு நிலத் தொகுப்பினை ஏற்படுத்தி, குழுவாக சாகுபடிக்கு கொண்டு வருவதற்கு மொபைலில் உழவன் செயலில் தாங்களாகவே பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
பதிவேற்றம் செய்த விவரங்களை வேளாண் அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு சரிபார்த்த பின் நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்படும். ஆழ்துளை கிணறு அல்லது குழாய் கிணறு அமைத்து தரப்படும். கூடுதல் தகவலுக்கு தங்கள் பகுதி வேளாண் விரிவாக்க மைய அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.