தேசிய நெடுஞ்சாலையில் ஜாலியாக படுத்து உறங்கிய குட்டி யானையை தொந்தரவு செய்யாமல்,வாகனங்கள் நிறுத்தம்.எங்க காட்டுல ரோடு போட்டு ஆக்கிரமித்தது நீங்க! என்பதை உணர்த்தும் காட்சி இது.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே கேரள மாநிலம் முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இதை ஒட்டி கர்நாடக மாநிலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.இந்த சாலையில் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு யானைகள் கூட்டம் வந்தது. அதில், ஒரு குட்டி யானை சாலையின் நடுவில் படுத்து உறங்கியது. இதனால், தேசிய நெடுஞ்சாலையின் இரண்டு பக்கமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
யானையை எழுப்ப ‘ஹாரன்’ அடித்த போதும், யானை எழவில்லை. அதன் அருகே காவலுக்கு நின்ற யானைகள் சாலையோரம் மேய்ச்சலில் ஈடுபட்டன. ஒரு மணி நேர உறக்கத்திற்கு பின், மெதுவாக எழுந்த குட்டி யானை கூட்டத்துடன் வனத்திற்குள் சென்றது.
இந்த சாலையில் வன விலங்குகள் இடையூறு இன்றி செல்ல கோர்ட் உத்தரவின் படி, இரவு, 9:00 மணிக்கு மேல் தனியார் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. இதனால், அரசு பஸ்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.