கோவை 19.06.23:
கோவை புலியகுளம் புனித அந்தோணியார் தேர் திருவிழாவை முன்னிட்டு அனைத்து மதத்தினர் கலந்து கொண்ட தேர் பவனி நடைபெற்றது.
கோவை புலியகுளம் பகுதியில் புனித அந்தோணியார் தேவாலயத்தின் தேர்த் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.சிறப்பு திருப்பலியை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் தேர் பவனி நடைபெற்றது.15 தேர்கள் இந்த தேர் பவனியில் கலந்து கொண்டன.
இதற்கு முன்னர் இந்த தேர் தயாரிப்பு பணி புலியகுளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கூடாரம் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்றது.இந்த தயாரிப்பு பணியில் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஈடுபட்டு உள்ளனர். மத ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக புலியகுளம் பகுதியில் பெரியநாயகி மாதா,சகாய மாதா,புனித சூசையப்பர்,அன்னை தெரசா,தங்க மாதா,புனித அந்தோணியார்,
புனித மிக்கேல் அதிதூதர்,உலக இரட்சகர், புனித செபஸ்தியார், மரிய மதலேனாள்,பூண்டி மாதா,வேளாங்கண்ணி,காணிக்கை மாதா, குழந்தை இயேசு, லூர்து மாதா என பதினைந்து தேர்கள் இந்த பவனியில் உலா வந்தது.
சமூக நல்லிணக்கம் என்பது தற்போதைய காலத்தில் தேவையான ஒன்றாக இருக்கும் சூழலில் புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் இதற்கு எடுத்துக்காட்டாக இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .