இரவு நேரங்களில் காட்டுயானை உலா பொதுமக்கள் பீதி.
கோவை. நவம்பர். 22-
பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் இரவில் உலா வந்ததால். அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.கோவை புறநகர் மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களில், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.துடியலுார் அருகே குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பழனிகவுண்டன்புதுார், ராமகிருஷ்ணா நகர், நேதாஜி நகர், கவுதம் நகர் பகுதிகளில்
நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணிக்கு இரண்டு யானைகள் அப்பகுதியில் உலா வந்தன.அவை வீடுகளுக்கு முன் வளர்ந்திருந்த வாழைகள், தென்னங்கன்றுகளை பிடித்து இழுத்து சேதப்படுத்தின.
இதனால், பீதியில் உள்ள அப்பகுதியினர் வேட்டை தடுப்பு காவலர்களை முழுமையாக பணியில் ஈடுபடுத்த கோரிக்கைவிடுத்துள்ளனர்.அப்பகுதி மக்கள் கூறுகையில்,’காட்டுயானைகள் இங்குள்ள பள்ளத்தின் வழியாக வந்து மேட்டுப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன. காட்டு யானைகளின் வரவை தடுக்க, வனத்துறையினர் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.வேட்டை தடுப்பு காவலர்களை முழுமையாக பணியில் ஈடுபடுத்த வேண்டும்’ என்றனர்.