health

மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் கலெக்டர் சமீரன் எச்சரிக்கை.வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு ஓமைக்ரான் வைரஸ் பரிசோதனை.

1.12.21:

கோவை சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் சமீரன் நேற்று காலை ஆய்வு செய்தார்.பஸ்சில் ஏறி பயணிகளிடம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். சிங்காநல்லுார் சுற்றுப்பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை வீடு, வீடாக பார்வையிட்டார்.

பின், நிருபர்களிடம் கலெக்டர் கூறியதாவது:கோவையில் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்பை குறைத்துள்ளோம். மாவட்டம்முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஓமைக்ரான் வைரஸ் புதிதாக வந்துள்ளது. அந்த தொற்று நம் நாட்டில் இன்னும் கண்டறியப்படவில்லை. கோவை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு, ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்யப்படுகிறது.பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே, பயணிகள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

மாஸ்க் அணியாமல் பொது இடங்களுக்கு வரும் நபர்களுக்கு அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளோம். தினமும், 9 ஆயிரம் கொரோனா டெஸ்ட் எடுத்து வருகிறோம். வாளையாரில் மீண்டும் முகாம் அமைத்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.மாநகராட்சி கமிஷனர் உட்பட பல்வேறு அதிகாரிகள் உடனிருந்தனர்.