health

கோவை 27.07.22:

கோவை மாநகராட்சியில் உள்ள 32 நகர நல மருத்துவமனைகளின் செயல்பாடுகள் மற்றும் மகப்பேறு தாய்மார்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த ஆய்வு கூட்டம் , மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தலைமையில் நடைபெற்றது.

தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் ஏற்படும் நோய்களுக்கு உரிய மருந்து மாத்திரைகளை தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என ஆணையாளர் பிரதாப் அறிவுறுத்தியுள்ளார். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் கனிவாக பேசி தரமான சிகிச்சை வழங்க வேண்டும். மருத்துவம் மற்றும் கல்வி ஆகிய இரண்டையும் அரசு சேவை மனப்பான்மையில் வழங்கி வருகிறது. எனவே இதன் முக்கியத்தை உணர்ந்து மருத்துவர்கள் பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார்.

கடந்த நான்கு மாதங்களில் நகர்நல மருத்துவமனைகளில் 43 மகப்பேறு நடைபெற்று, தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும், சிகிச்சை வழங்கிய மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார். இதேபோன்று மற்ற மருத்துவமனைகளும் மகப்பேறு சேவையை ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்புடன் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார் .

நகர் நல மருத்துவமனைகளில் மகப்பேறு சிகிச்சை பெற்ற தாய்மார்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவிகள் முறையாக சென்றடைகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார். மேலும் நகர் நல மருத்துவமனைகளில் மகப்பேறு சிகிச்சை அளிக்க தேவையான அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விரைவில் வழங்கப்படும் என்றார்.

இந்த கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, நகர் நல அலுவலர் பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார், உதவி நகர் நல அலுவலர் ராம்குமார் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.