CM Operation கொங்கு.ADMK கோட்டை.தகர்க்கும் DMK.
கோவை 25.08.22:
முதல்வர் மு க ஸ்டாலின் கொங்கு மண்டல பகுதியில் 4நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதிமுகவின் கோட்டை என வர்ணிக்கப்படுவது கொங்கு மண்டலம். குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளில் அதிமுக கூட்டணி கட்சிகள் தான் வென்றுள்ளன. இதனை கருத்தில் கொண்டு கொங்கு மண்டலத்தில், திமுகவின் பலத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் மு க ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இதற்காக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவையில் முகாமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
சட்டமன்றத் தேர்தலை அடுத்து நடந்த உள்ளாட்சி தேர்தலில், கோவை மாநகராட்சியின் பெரும்பான்மையான வார்டுகளில் திமுக வெற்றி கனிகளை பறித்தது. இதன் தொடர்ச்சியாக தொழில் துறையிடம் கலந்துரையாடல், பல்வேறு நலத்திட்ட உதவிகள், புதிய திட்டங்கள் துவக்கம் என முதல்வர் மு க ஸ்டாலின் பார்வையில் கொங்கு மண்டலம் தனிக் கவனம் பெற்று வருகிறது. இந்த வரிசையில் தான் தற்போது பொள்ளாச்சி ஆட்சி பட்டியில் நடந்த திமுக பொதுக்கூட்டம் அனைவரையும் உற்றுநோக்கு வைக்கிறது.
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறு குட்டி, சூலூர் தொகுதியின் முன்னாள் தேமுதிக எம்எல்ஏ பணப்பட்டி தினகரன், பாஜக மாநில மகளிரணி செயலாளர் மைதிலி, அதிமுக மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அபிநயா, மக்கள் நீதி மையம் மாவட்ட தலைவர் வினோத் குமார் உள்ளிட்ட மாற்று கட்சியை சேர்ந்த 50,000 மேற்பட்டோர் திமுகவில் முறைப்படி முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர்.
அதிமுகவில் இபிஎஸ் ,ஓபிஎஸ் இடையிலான உட்கட்சி மோதல், அக்கட்சியினரை மாற்றுக் கட்சியில் இணைய தூண்டி உள்ளதாக கருதப்படுகிறது. தொடர்ச்சியாக இனி வரும் காலங்களில், அதிமுகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணையலாம் என கூறப்படுகிறது.