kovai 17.06.23:

கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இளமறிவியல் பட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல்  வெளியிடப்பட்டது. 2 மாணவிகள் உட்பட 3 மாணவர்கள் 200 க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.

 

2023-24 ஆம் கல்வியாண்டு முதல் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், நாகப்பட்டினம் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் இணைந்து பொதுவான இணையதள விண்ணப்பம் மூலம் இளமறிவியல் பட்டப்படிப்பில் சேர தகுதியான மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்  பெறப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஒருங்கிணைப்பு முகவராக செயல்படுகிறது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 3 பட்டயப்படிப்புகளுக்கும், மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.  தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் 6 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் மற்றும் 3 தொழில்முறை பாடப்பிரிவுகளுக்கும் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். இந்த கல்வியாண்டில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளுக்கு 2555 இடங்கள் மற்றும் இணைப்பு கல்லூரிகளுக்கு 2806 இடங்கள் என மொத்தம் 5361 இடங்கள் நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பங்கள் இணையதள வாயிலாக கடந்த மே 10 ஆம் தேதி துவங்கி கடந்த 9 ஆம் தேதி வரை பெறப்பட்டன. இளமறிவியல் மாணவர்கள் சேர்க்கைக்கு மொத்தம் 41 ஆயிரத்து 434 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 36 ஆயிரத்து 612 பேர் தரவரிசைக்கு தகுதியானவர்களாக உள்ளனர். இவர்களுள் பெண் மாணவிகளின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 384 பேரும், ஆண் மாணவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 333 பேரும் என மாணவிகள் சுமார் 63 சதவீதமும்,  37 சதவீதம் மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.  அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 10 ஆயிரத்து 887 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 403 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள் இட ஒதுக்கீட்டில் 20 இடங்களும், மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக்கீட்டில் 5 சதவீதமும் இட ஒதுக்கீடு செய்யப்படும்.

தொடர்ந்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு தொடர்பாக  கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி செய்தியாளர்களை சந்தித்தார். இன்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படுவதாகவும், இதே போல நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் தரவரிசை பட்டியல் அங்கு தனியாக வெளியிடப்படுவதாகவும் தெரிவித்தார்.இந்திய அளவில் வேளாண் சார்ந்த படிப்புகளில் பெண் பிள்ளைகள் அதிகளவில் ஆர்வம் காட்டுவதாகவும், தமிழகத்தில் கூடுதலாக 70 :30 என்ற அடிப்படையில் இந்த ஆர்வம் உள்ளதாக கூறியவர், வேளாண் படிப்புகளுக்கு மாணவர் மத்தியில்  நல்ல வரவேற்பு இருப்பதுடன், இந்தாண்டு தரமான மாணவர்கள் அதிக மதிப்பெண்களுடன் விண்ணப்பித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

 

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி திவ்யா முதலிடமும், உசிலம்பட்டியை சேர்ந்த மாணவர் ஸ்ரீ ராம் இரண்டாம் இடமும், சங்கரன்கோவில் மாணவி முத்துலட்சுமி மூன்றாமிடமும் பெற்றிருப்பதாக தெரிவித்தார்.ஜூன் மாதம் 3 வது வாரத்தில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, ஜூலை கடைசி வாரத்தில் மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்படும் என்றவர், கடந்தாண்டை விட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆண்டு அதிகமாக விண்ணப்பித்துள்ளதாகவும், குறிப்பாக, தமிழ் வழியில் இளமறிவியல் வேளாண், இளமறிவியல் தோட்டக்கலைத்துறை ஆகிய இரு படிப்புகளுக்கு தலா 50 இடங்கள் என 100 இடங்களுக்கு 9997 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், கலந்தாய்வு முழுவதும் ஆன் லைன் மூலம் நடத்தப்பட்டு, சான்றிதழ் சரிபார்க்க மட்டும் நேரில் வர வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *