today times

வன உயிர் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கம்.

28.11.21:
கோவை வனக்கோட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட வாளையார் பகுதியில் நேற்று இரவு ரயில் மோதி 3 யானைகள் இறந்த நிகழ்வு வனத்துறை சார்ந்த பணியாளர்கள் மத்தியிலும், வன உயிர் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த கவலையினை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய துறையான இரயில்வே துறை தொடர்புடைய இதுபோன்ற நிகழ்வுகளில் விசாரணை மேற்கொள்வதும், சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பதும் மிகவும் சவாலான ஒன்றாகவே உள்ளது.

வன உயிர் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும், இதுபோன்ற வன உயிர் முரண்பாடுகளுள்ள பகுதிகளில் வன உயிரினங்களை காக்க எடுக்கப்பட வேண்டிய திட்டங்கள், அதற்காக குறைவின்றி ஒதுக்கப்பட்ட வேண்டிய நிதி போன்றவைகளில் நாம் முன்னேற வேண்டியதன் அவசியத்தை எண்ணிப்பார்க்க வேண்டும். நேர்மறை திட்டங்களை நோக்கி துரித கதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

யானைகள் இறப்பு விசாரணை நிகழ்வில் எங்களுடன் உடன் நின்ற வன உயிர் ஆர்வலர்கள், அரசு சாரா தொண்டு நிறுவன அன்பர்கள், பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றிகள்.

மேலும், இந்நிகழ்வு தொடர்பான விசாரணை நடவடிக்கைகளின்போது நமது பணியாளர்களுக்கு ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவத்தை தொடர்ந்து அக்கறையுடன் முன்னின்று பாலக்காடு வரை சென்று மீட்டிற்கு உதவியாகவும் உறுதுணையாகவும் நின்ற தன்னார்வளர்கள், மற்றும் மதிப்புமிகு பத்திரிக்கையாளர்களுக்கும், உயர்அதிகாரிகள் அவர்களுக்கும் விசாரித்த நண்பர்களுக்கும்அடுத்த கட்ட நகர்வுகளுக்காக மாவட்ட அலுவலகம் திரண்டு வந்த, வந்துகொண்டிருந்த சங்க உறுப்பினர்களுக்கும் அன்பு கலந்த நன்றிகள்.

சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது பணியாளர்கள் பாதிக்கப்படுவதை எவ்விதத்திலும் சங்கம் அனுமதிக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராவண்ணம் எடுக்கப்பட வேண்டிய அம்சங்கள் தொடர்பாக தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கம் தமது உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

நிர்வாகிகள்,
கோவை மாவட்டக் கிளை,
தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கம்.