குருத்துவப் பொன்விழா.

கோவை ஒண்டிப்புதூர் புனித ஜோசப் ஆலயம் பங்குத்தந்தை திரு ஆரோக்கியசாமி அடிகளார் அவர்கள் குருத்துவம் பெற்று 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை கொண்டாடும் விதமாக 30.12.21 வியாழக்கிழமை அன்று காலை 10 மணிக்கு புனித ஜோசப் ஆலயத்தில் திருப்பலி நடைபெற்றது. இதில் கோவைமறை மாவட்ட மேதகு ஆயர் டாக்டர் தாமஸ் அக்வினாஸ் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாக அரங்கில், குருத்துவ பொன்விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

குருத்துவப் பொன்விழா மலரினை மேதகு ஆயர் டாக்டர் தாமஸ் அக்வினாஸ் அவர்கள் வெளியிட்டார்.விழா மலரின் முதல் பிரதியை திரு.ஆரோக்கியசாமி அடிகளாரின் முன்னாள் மாணவரும் ,கோவை ராயல் கேர் மருத்துவமனை தலைவருமான டாக்டர் மாதேஷ்வரன் பெற்றுக்கொண்டார்.இவ்விழாவில் சிறப்புரை ஆற்றிய மேதகு ஆயர் டாக்டர் தாமஸ் அக்வினாஸ் ஆரோக்கியசாமி அடிகளாரைப் பற்றி கூறுகையில் “50ஆண்டு கால இறைப்பணியுடன் கல்விப்பணியும் சிறப்பாக ஆற்றினார் என்றார்.சிறந்த ஆசிரியராகவும்,சிறந்த தலைமை ஆசிரியராகவும்,சிறந்த தாளாளராகவும் அனைத்து கல்வி நிலையங்களின் நிர்வாகியாக திறம்பட பணியாற்றியவர்” என புகழ்ந்துரைத்தார்.

இவ்விழாவில் சிறப்புரை ஆற்றிய தமிழக ஆயர் பேரவை சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் அருட் தந்தை முனைவர் அ.சேவியர் அருள் ராசு பேசுகையில்,”ஆரோக்கியசாமி அடிகளார் இறைப்பணி,பொதுத்தொண்டு,கல்விப்பணி செய்வதற்க்காகவே படைக்கப்பட்டவர் என்பதுடன்,பெண்களுக்கு சமஉரிமை பகிர்ந்தளிக்கும் சமத்துவவாதி “என புகழாரம் சூட்டினார்.

அகில உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ்,வத்திகான் நகரில் இருந்து குருத்துவ பொன்விழா வாழ்த்து மடல் அனுப்பி இருந்தார். வாழ்த்து மடலை கோவை மறைமாவட்ட பொருளாளர் ஜோ பிரான்சிஸ் அடிகளார் வாசித்தார்.

இந்த பொன்விழா நிகழ்வில் ஏராளமான அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள் பங்கேற்றனர்.