கோவை 17.06.23:
காவலர்கள் ஆபத்து காலங்களில் உயிரைக் காப்பாற்ற தயங்காமல் செயல்பட வேண்டும் என முதலுதவி பயிற்சி முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அறிவுரை வழங்கினார்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன். முன்முயற்சியால், கோவை மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் காவல்துறையினர் ஒவ்வொருவருக்கும் , விபத்து காலங்களில் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில், ஒவ்வொரு வாரமும் ALERT NGO உதவியுடன், முதலுதவி பயிற்சி முகாம் (FIRST AID CLASS) கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் சுமார் 440 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இன்று (17.06.2023) ஆயுதப்படையில் நடந்த முதலுதவி பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், காவலர்கள் ஆபத்து காலங்களில் உயிரை காப்பாற்ற தயங்காமல் சிறப்பாக செயல்பட்டு உயிரை காப்பாற்ற வேண்டும் என்றார்.ஆபத்தான நிலையில் இருப்பவர்களை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் முன், அவர்களுக்கு தேவையான அவசர சிகிச்சையே முதலுதவி என தெரிவித்தார்.
சரியான நேரத்தில் செய்யப்படும் சரியான முதலுதவி, சக மனிதனின் உயிரை காப்பாற்ற உதவும் என்று கூறினார். எனவே, மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் இம்முதலுதவி பயிற்சியை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் வரும் வாரங்களிலும் அனைத்து அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.