‘ஏ’ லைனில் ரயில் வந்தது ஏன் தெற்கு ரயில்வே விளக்கம்.
30.11.21:
கோவையில் சரக்கு ரயில் ‘பி’ லைனில் இயக்கப்பட்டதாலேயே யானைகள் மீது மோதிய ரயில், ‘ஏ’ லைனில் இயக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.கோவை, மதுக்கரை வனச்சரகம், நவக்கரை, மாவுதம்பதி மலை கிராமத்தில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற, மூன்று யானைகள் ரயில் மோதி உயிரிழந்தன. கேரளாவில் இருந்து கோவைக்கு ‘பி’ லைனில், வரவேண்டிய மங்களூரு – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், ‘ஏ’ லைனில் வந்ததாலேயே விபத்து நடந்ததாக பல்வேறு தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டது.
இதை மறுத்துள்ள தெற்கு ரயில்வே நிர்வாகம், ‘சரக்கு ரயில் ‘பி’ லைனில் இயக்கப்பட்டதாலேயே மங்களூர் – சென்னை ரயில் ‘ஏ’ லைனில் இயக்கப்பட்டது’ என, தெரிவித்துள்ளது.தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:போத்தனுார் – பாலக்காடு இடையே உள்ள இரு ரயில் பாதைகளிலும், இரு மார்க்கத்திலும், ரயில்கள் இயக்கப்படும்.போத்தனுார் பகுதி உயரமாக இருப்பதால், ‘ஏ’ லைனில் சரக்கு ரயில்களை இயக்குவது மிகவும் கடினம்.இதையடுத்து ரயில்களின் தன்மை, அதில் உள்ள எடையின் அளவு ஆகியவற்றை கணக்கிட்டு
அதற்கேற்றார் போல் ரயில் பாதைகளில் இயக்கப்படும். விபத்து நடந்த அன்று ‘பி’ லைனில் சரக்கு ரயில் இயக்கப்பட்டதால், ‘ஏ’ லைனில் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி, ரயில்வே நிர்வாகம் வனத்துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.