புத்தாண்டு கொண்டாட நீச்சல் குளங்களில் தடை.Happy New Year 2024.

விபத்துகள் இல்லா புத்தாண்டு கொண்டாட்டங்கள் இருக்க,கோவை மாநகர் முழுவதும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்க உலகமே ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளது.
இந்த புத்தாண்டை பாதுகாப்பாக, விபத்தில்லாமலும் மகிழ்ச்சியுடன் கொண்டாட, காவல்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
கோவை மாநகரத்தில் உள்ள ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள் உரிமையாளர்களுடன் கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், புத்தாண்டு கொண்டாட்டங்களை பாதுகாப்பானதாக கொண்டாட,நகர் முழுவதும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளதாக தெரிவித்தார்.மாநகரில் விபத்துகள் இல்லா கொண்டாட்டங்கள் அமைய 500 சோதனை சாவடிகள் அமைக்கப்படும் என்று தெரிவித்த அவர்,மது குடித்து வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

31ஆம் தேதி இரவு முதல் கோவையில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் மூடப்படும் என்றார்.
ஆம்புலன்ஸ் மற்றும் அவசர வாகனங்கல் மட்டும் அனுமதிக்கப்படும் என தெரிவித்தார்.35 நான்கு சக்கர வாகனங்களிலும், 60 இருசக்கர வாகனங்களிலும் காவல்துறையினர் நகர் முழுதும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவர் என கூறினார்.

ஹோட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் இரவு ஒரு மணி வரை மட்டுமே கொண்டாட்டங்களுக்கு அனுமதிக்கப்படும் என்று கூறியவர், நீச்சல் குளங்கள் உள்ள பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.