நகர முன்னேற்றத்தை மதிப்பிடும் ‘நிதி ஆயோக்’ திட்ட மதிப்பீட்டில் இந்திய அளவில் கோவைக்கு 2-ம் இடம்.
26.11.21:
நிதி ஆயோக்கின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் திட்டத்தில் 2021-ம் ஆண்டுக்கான மதிப்பீடுகள் குறித்தஅறிக்கையில் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் கோவை 2-ம் இடம் பெற்றுள்ளது.நாட்டில் நிலையான வளர்ச்சி இலக்குகள் பின்பற்றப்படுவதைக் கண்காணிப்பது, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இடையே ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கைகளை ஊக்குவிப்பது ஆகிய முக்கியப் பணிகளை மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ மேற்கொள்கிறது.
அந்த வகையில் முக்கிய நகரங்களின் முன்னேற்றத்தை மதிப்பிடும் நீடித்த வளர்ச்சி இலக்குகள் (எஸ்டிஜி) திட்டத்தில், 2021-ம் ஆண்டுக்கான மதிப்பீடுகளை ஜெர்மனியைச் சேர்ந்த வளர்ச்சி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து நிதி ஆயோக் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது.சுகாதாரம், கல்வி, பாலினம், பொருளாதார வளர்ச்சி, நிறுவனங்கள், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு இலக்குகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சியை அளவிடும் அளவுகோலாக இந்த மதிப்பீடு பார்க்கப்படுகிறது.
இவ்வாறு வெளியிடப்பட்ட மதிப்பீட்டில் ஒட்டுமொத்த அடிப்படையில் கோவை நகரம் 73.29 மதிப்பெண் பெற்று நாட்டில் 2-ம் இடம் பெற்றுள்ளது. முதலிடத்தை 75.50 மதிப்பெண்கள் பெற்று சிம்லா பிடித்துள்ளது. திருச்சி நகரம் 70 மதிப்பெண்களுடன் 8-வது இடத்தையும், சென்னை நகரம் 69.36 மதிப்பெண்களுடன் 11-வது இடத்தையும், மதுரை 65.86 மதிப்பெண்களுடன் 26-வது இடத்தையும் பெற்றுள்ளன. மொத்தமாக 56 இந்திய நகரங்கள் இந்த மதிப்பீட்டுக்கான பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வறுமை ஒழிப்பில் முதலிடம்:
அதே நேரத்தில், ‘வறுமை ஒழிப்பு’ என்ற பிரிவில் 87 மதிப்பெண்கள் பெற்று கோவை முதலிடத்தில் உள்ளது. 80 மதிப்பெண்களுடன் திருச்சி, மதுரை நகரங்கள் 2-வது இடங்களில் உள்ளன. சென்னை 65 மதிப்பெண்களுடன் 10-வது இடத்தில் உள்ளது.‘உடல் நலம் பேணுதல்’ என்ற பிரிவில் 71 மதிப்பெண்களுடன் கோவை 5-வது இடத்தில் உள்ளது. தரமான கல்வி என்ற பிரிவில் 88 மதிப்பெண்களுடன் கோவை 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது. முதல் இரண்டு இடங்களைக் கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சி நகரங்கள் பிடித்துள்ளன.பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பெண்களுக்கு எதிராக கணவர் அல்லது உறவினர்களால் ஏற்படுத்தப்படும் துன்புறுத்தல்கள் மற்றும் கொடுமைகள், பெண் கல்வி, பாலின பிறப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு அடையாளப்படுத்தப்படும் ‘பாலின சமன்பாடு பிரிவில்’ 87 மதிப்பெண்களுடன்
சென்னை 9-வது இடத்திலும், 86 மதிப்பெண்களுடன் திருச்சி 11-வது இடத்திலும், 82 மதிப்பெண்களுடன் கோவை 16-வது இடத்திலும், 71 மதிப்பெண்களுடன் மதுரை 41-வது இடத்திலும் உள்ளன.