கோவையில் ரயில் மோதி யானைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சகத்தை வழக்கில் சேர்க்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
07.12.21:
கோவை நவக்கரை பகுதியில் ரயில் மோதி கர்ப்பிணி யானை உட்பட மூன்று யானைகள் கடந்த நவம்பர் 26-ம் தேதி உயிரிழந்தன. இதையடுத்து, மதுக்கரை-வாளையாறு வழித்தடத்தில் யானைகள் உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்க ரயில்வே, வனத்துறையினர் இணைந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக ‘பீப்பிள் ஃபார் கேட்டில் இன் இந்தியா’ அமைப்பு தொடர்ந்த வழக்கில் சென்னையில் உள்ளதென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்தியகோபால் ஆகியோர்,பிறப்பித்துள்ள உத்தரவில், மனித-விலங்கு மோதலை தவிர்ப்பது, யானைகளுக்கு அவசர கால சிகிச்சை அளித்து காப்பாற்றுவது ,
மனிதர்களின் தலையீட்டால் விலங்குகள் உயிரிழப்பை தடுப்பது குறித்த செயல் திட்டத்தில், இந்த விஷயத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, அதற்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க ஏதுவாக, சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலகம், சேலம் கோட்ட ரயில்வே அலுவல கம், மத்திய ரயில்வே அமைச்சகம் ஆகியவற்றை இந்த வழக்கில் கூடுதல் எதிர்மனுதாரர்களாக சேர்க்க மனுதாரர் நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று உத்தர விட்டனர்.