ஊட்டி கோடநாடு வழக்கில் இருவருக்கு டிசம்பர் 6 ஆம் தேதி வரை காவல் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு
கோவை. நவம்பர். 23.-
ஊட்டி கோடநாடு வழக்கில் இருவருக்கு மேலும் 15 நாள் காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோடநாடு கொலைகொள்ளை வழக்கு ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் விபத்தில் பலியான கனகராஜின் சகோதரர் தனபால் உறவினர் ரமேஷ் ஆகியோரை தடயங்களை அழித்த குற்றச்சாட்டுக்காக தனிப்படை போலீசார் அக். 25ம் தேதி சேலத்தில் கைது செய்து கூடலுார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நீதி மன்ற காவல் முடிந்து நேற்று தனிப்படை போலீசார் ஊட்டி செஷன்ஸ் கோர்ட் நீதிபதி சஞ்சய்பாபா முன் ஆஜர்படுத்தினர்.
அவர்களுக்கு 15 நாள் காவல் நீட்டிப்பு செய்து டிச. 6ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையே இரண்டாவது முறையாக ஜாமின் கோரி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வக்கீல் ராஜசேகரன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி நவ. 26 ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். பின் இருவரும் கூடலுார் சிறையில் அடைக்கப்பட்டனர்.