கொரோனா காலத்தில் பணியாற்றிய தற்கான ஊக்க ஊதியத்தை அரசு வழங்க வேண்டும் கிராம செவிலியர்கள் வலியுறுத்தல்.
கோவை. நவம்பர். 25-
கோவை கொரோனா காலத்தில் பணியாற்றியதற்கான ஊக்க ஊதியத்தை, அரசு அறிவித்தபடி உடனடியாக விடுவிக்க, கிராம சுகாதார செவிலியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவையில் கிராம சுகாதாரம், பகுதி சுகாதாரம், சமுதாய சுகாதாரம் என்ற பிரிவுகளில், 350க்கும் மேற்பட்ட செவிலியர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், கிராமப்புறங்களிலுள்ள தாய்-சேய் நலப்பணிகளை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், அறிவித்த ஊக்க ஊதியம் வழங்க இவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து, கோவை மாவட்ட கிராம, பகுதி சமுதாய செவிலியர் கூட்டமைப்பின் செயலாளர் லில்லி கூறுகையில்,”வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்துவதை தவிர்த்து, வாரம் ஒரு நாள் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிப்பதை கைவிட வேண்டும். பணி நேரம் காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி என வரையறை செய்ய வேண்டும்.
கொரோனா காலத்தில் பணியாற்றியதற்கு 2021 ஏப்., மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கான, 15,000 ரூபாய் ஊக்க ஊதியத்தை, உடனடியாக விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.