அயன் படக் காட்சியைப் போல் மாத்திரை வடிவில் விமானத்தில் தங்கம் கடத்தல்.
02.12.21:
சார்ஜாவில் இருந்து கோவைக்கு வரும் விமானத்தில் நபர் ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக கோவை விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.அதனடிப்படையில் கோவை விமான நிலையம் வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தனர்.கிடைக்கப்பெற்ற தகவல் அடிப்படையில், நபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி ஆய்வு செய்தனர். அவர் கொண்டுவந்த உடமைகளில் கடத்தல் தங்கம் ஏதுமில்லை என தெரியவந்தது.
மேற்கொண்டு அந்த நபரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேனிங் செய்து பார்த்தனர். அப்போது ஆசனவாயில் மாத்திரை வடிவிலான மூன்று பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.மருத்துவர்கள் உதவியுடன் அந்த நபரின் உடலில் இருந்து மூன்று மாத்திரைகள் எடுக்கப்பட்டது. அதை பரிசோதித்து பார்த்தபோது சில வேதி பொருட்களை கொண்டு 3 பாக்கெட்டுகளில் தங்கத்தை கலந்து,மாத்திரை வடிவில் உருமாற்றி கடத்தியது தெரியவந்தது.
ரசாயன கலவை உதவியுடன் மூன்று மாத்திரைகளையும் கரைத்து சோதித்த போது, அதில் 24 காரட் சுத்தத் தங்கம் கலக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.கடத்திக் கொண்டு வரப்பட்ட மொத்த தங்கத்தின் எடை 640 கிராம். இதன் சந்தை மதிப்பு 31 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கம் கடத்திய நபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து பின்னர் அவரது சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.
பொழுது போக்கிற்காக எடுக்கப்படும் சினிமா படங்களை பார்த்து சிலர் இதுபோன்ற கடத்தலில் ஈடுபடுகின்றனர். இன்றைய நவீன தொழில்நுட்பத்தில்,கடத்தல் பொருள் எளிதாக கண்டுபிடித்துவிட முடியும் என்கின்றனர் அதிகாரிகள்.