கோவை 17.06.23:
சம்சாரத்தை மின்சாரமாக பார்க்கும் காலத்தில்,மனைவியின் சமாதியில் தினந்தோறும் ஒளி ஏற்றி வழிபட்டு வரும் கணவன் ஒருவரின் கதை இது.
கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுப்பிரமணியம்.இவரது மனைவி சரோஜினி, மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு மனைவி சரோஜினி இறந்த பிறகு, மகனுடன் வசித்து வருகிறார். மனைவி மீது கொண்ட அன்பால்,சரோஜினியின் சமாதியில் தினம் தோறும், காலை மாலை இருவேளையும் விளக்கேற்றி, ஊதுபத்தி சூடம் கொளுத்தி வணங்கி வருகிறார்.
உயிருடன் இருக்கும் போது மனைவி சரோஜினி தன் மீது உயிராய் இருந்தார் என்று கூறிய சுப்பிரமணி, தனக்கு ஏதாவது ஒன்று என்றால் துடித்து விடுவார் என்று கூறினார். எனக்கு ஹார்ட் அட்டாக் வந்த போது என் மனைவி என்னை மிகவும் அக்கறையுடன் கவனமாக பார்த்துக் கொண்டதாகவும் கூறி கண் கலங்கினார்.
என் மனைவி என் மீது வைத்திருந்த காதல், பாசம், அக்கறை ஆகியவற்றுக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக, நாள்தோறும் தவறாமல் தன் மனைவியின் சமாதிக்கு வந்து,விளக்கேற்றி வணங்குவதாக தெரிவித்தார். தினமும் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும் கூட கண்டிப்பாக வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை இங்கு வருவதாகவும் கூறினார்.
இன்னமும் கூட தன் மனைவி தன்னுடனேயே இருப்பதாக உணர்ந்து வாழ்வதாக கூறிய அவரது நினைவுகள் என்றும் பசுமை மாறாமல் அவருடன் பயணிக்கும். காரையும் சுண்ணாம்பும் வைத்து கட்டி இருந்தாலும், இந்த சமாதி இவரது அன்பின் அடையாளமாக தங்க தாஜ்மஹாலுக்கு சமம்.