ஆன்லைனில் வேலை தேடியவருக்கு நேர்ந்த கதி. கமிஷன் தருவதாக கூறி ஒன்னே கால் லட்சம் மோசடி. சைபர் கிரைம் போலீசார் விசாரணை.
கோவை.அக்டோபர். 27-
ஆன்லைனில் வேலை தேடியவருக்கு கமிஷன் அடிப்படையில் வேலை தருவதாக கூறி ஒன்னேகால் லட்சம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை அருகே உள்ள சின்ன தடாகத்தை சேர்ந்தவர் தினேஷ் வயது 28, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்.
இவர் பகுதிநேர வேலைவாய்ப்பு குறித்து இணையத்தில் வேலை தேடினார். அப்போது ஒரு இணையத்திற்கு சென்று வேலை வாய்ப்புக்காக தனது பெயர், செல்போன் எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் அவரது வாட்ஸ் – ஆப் எண்ணிற்கு ஒரு தகவல் வந்துள்ளது.
அதில் குறிப்பிட்ட அளவு பணத்தை செலுத்தி உறுப்பினராக பதிவு செய்து கொண்டால், அந்த இணையதளம் வழியாக நடைபெறும் பொருட்கள் விற்பனையில் அதிக அளவு கமிஷன் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது.
இதை நம்பிய அவர் அந்த இணையதளத்தில் குறிப்பிட்ட வங்கி கணக்கு எண்ணிற்கு ஆன்லைன் மூலமாக ரூபாய் 5000, ரூபாய் 10,000 ரூபாய் 30,000 என பல்வேறு தவணைகளாக ரூபாய் ஓரு லட்சத்து 13 ஆயிரம் பணம் செலுத்தி உள்ளார்.
இந்த நிலையில் அந்த இணையத்தில் கூறியபடி அவருக்கு கமிஷன் எதுவும் வரவில்லை. இதனால் அந்த இணையத்திலிருந்து தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அந்த எண்ணில் எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் மோசடி நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.