Beaware of online crimes-DGP

11.12.22:
கோவை மாநகர காவல்துறை அலுவலக வளாகத்தில் இணைய வழி குற்றப் பிரிவு காவல்நிலையத்தை, தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு திறந்துவைத்தார். மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார்.கொலை, கொள்ளை, கஞ்சா, தங்கக் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.செய்தியாளர்களிடம் பேட்டியளித்த காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு,கோவை மாவட்டத்தில் காவலர்கள் சிறப்பாக பணி செய்து வருகின்றனர். கொலை மற்றும் ஆதாயக் கொலைகளில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்டு பணியாற்றி வருகின்றனர்.கொலை வழக்குகளில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொள்வது, கஞ்சா விற்பவர்களை கைது செய்து சப்ளை குறைக்க நடவடிக்கை எடுத்தவர்கள், தங்கம் கடத்தல் வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.கோவையில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க 15 காவல் நிலையங்கள் உள்ளது. மேலும் 3 புதிய காவல் நிலையங்கள் திறக்கப்படும்.

தமிழகத்தில் கடந்த வருடத்தில் 1597 கொலைகள் நடந்துள்ளது. இந்த ஆண்டு 1368 கொலைகள் நடந்துள்ளது. 15% கொலை குற்றங்கள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.ஆதாயக் கொலைகள், கொள்ளை வழக்குகள் வெகுவாக குறைந்துள்ளது. இவை, சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதை காட்டுகிறது.தமிழகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளோம். ஸ்மார்ட் சிட்டி, காவல் நிலையங்களை நவீன மயமாக்கும் திட்டத்திலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. பெரிய குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன.

காவல்துறையினருக்கு நவீன இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதில் சந்தேகப்படும் நபரை புகைப்படம் எடுத்தால் அவரது குற்றவழக்குகள் குறித்த தகவல்கள் வந்துவிடும்.கஞ்சா கடத்தலை தடுப்பதற்காக ஆறு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. மேலும் கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகளை கொண்டு வருபவர்களை கண்காணிக்க தென்காசி, பொள்ளாச்சி, கன்னியாகுமரி உட்பட ஆறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை செய்யப்படுகிறது.டோல்கேட்டுகளில் நவீன கேமராக்களை பயன்படுத்தி கண்காணிக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்றைக்கு இணைய வழி குற்றங்கள் அதிகமாகி வருகிறது. நவம்பர் மாதம் வரை 45 ஆயிரம் இணைய வழி குற்றங்கள் பதிவாகியுள்ளன.மின்சாரம் நிறுத்தப்படும், நெட் பேங்கிங் கோளாறுகள், குறைந்த வட்டியில் கடன் தருவதாகவும், திருமண உதவி செய்வதாகவும் இணைய வழியில் பல்வேறு குற்றங்கள் நடைபெற்று வருகிறது.இவற்றோடு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன.எந்த ஒரு வங்கியும் வங்கிக் கணக்கு குறித்த எந்த தகவலையும் கேட்பதில்லை.எனவே வங்கி கணக்கு சம்பந்தமான தகவல்களை பகிர்வதை தவிர்த்தாலே சைபர் குற்றங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். இதுகுறித்து காவல்துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம் என தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *