கோவை தொண்டாமுத்தூரில் புதியதாக கட்டப்பட்ட அரசு கலை கல்லூரி திறப்பு.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதி முத்திப்பாளையத்தில் கடந்த ஆட்சியின்போது 8 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு கலைக் கல்லூரியை இன்று முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து, தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார். அப்போது கல்லூரி ஆசிரியர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், கடந்த ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு கட்டப்பட்ட இந்தக் கல்லூரியை என்று முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்துள்ளார் என்றும் அரசியல் பாகுபாடின்றி கல்லூரி வளர வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் இப்பகுதி மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கை தற்பொழுது நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் இங்கு பயிலும் மாணவர்கள் மென்மேலும் படித்து முன்னேற வேண்டுமென வாழ்த்தினார். மேலும் கல்லூரிக்கு சுற்றுச்சுவர் மற்றும் இருக்கைகள் தேவைப்படுவதாக ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து உள்ளதாகவும் அதனை அரசின் கவனத்திற்கோ அல்லது சட்டமன்ற உறுப்பினரின் நிதியிலிருந்தோ பெற்று கூடிய விரைவில் அதனை செய்து தருவேன் என்றும் தெரிவித்தார். அதனை கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த அரசு கல்லூரி இன்று முதல் திறக்கப்பட்டது அப்பகுதி மக்களிடமும் மாணவர்கள் இடையேயும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.