வேளாண் பல்கலைக் கழகத்தில் 42வது பட்டமளிப்பு விழா.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் 42 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் இளங்கலை முதுகலை ஆராய்ச்சி படிப்பு முடித்த 88 பேருக்கு பட்டங்களை வழங்கினார். மொத்தம் 2602 நபர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளன.

பின்னர் இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அவர் பட்டங்களை பெற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்தியாவில் காலனி ஆதிக்கத்திற்கு முன்பு வரை விவசாயம் வளங்கள் சிறப்பாக இருந்ததாகவும் காலனி ஆதிக்கத்திற்கு பின்பு தான் நம் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது எனவும் கூறினார்.
தற்போது நாம் மற்ற நாடுகளின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளதாகவும் கூறினார்.விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது வரை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மூலம் 30,230 பேர் இளங்கலை பட்டமும், 11, 397 பேர் முதுகலை பட்டமும், 3504 பேர் ஆராய்ச்சி பட்டமும் பெற்றுள்ளனர் எனவும் கூரினார். இவர்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

வேளாண் கல்வியைப் பொருத்தவரை தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதிய பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளை பாதிக்கக் கூடிய இயற்கை பேரிடர்களை சமாளிக்கும் அளவிற்கான நவீன யுத்திகளை நாம் பயன்படுத்த வேண்டும் என கூறினார். இந்தியாவின் தலைசிறந்த 5 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் விரைவில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகமும் இடம் பெற வேண்டும்’ என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் நீ.குமார், வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் கல்வி துறை செயலர், புதுதில்லி இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை இயக்குநர், முனைவர் திருலோச்சன் மொகபத்ரா, மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகர காவல் ஆணையர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *