பருவமழை தீவிரம்.தமிழக அணைகள் நிரம்பும்.தண்ணீர் சேமிப்போம்.
கோவை 12.07.22:
அரபிக்கடல் காற்று தென்னிந்திய நிலப்பரப்பு வழியாக கிழக்கு நோக்கி நகர்கிறது. இதற்கு காரணம் வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி,அரபிக் கடல் காற்றை ஈர்க்கிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா, கோவா ,கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக பகுதிகளில் தொடர்ச்சியாக கன மழை பதிவாகியது.வரக்கூடிய ஜூலை 15ஆம் தேதி வரை அரபிக் கடலோரம் இருக்கக்கூடிய மாநிலங்களான மகாராஷ்டிரா கோவா மற்றும் கேரளா பகுதிகளில் கனமழை பொழியும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழையும் தீவிரமடைந்துள்ளதால் , தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி ,திண்டுக்கல், விருதுநகர், தென்காசி ஆகிய மலையோர பகுதிகளில் நல்ல மலைப்பொழிவு இருக்கும்.கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு மேற்கே உள்ள சோலையார் அணை அதன் முழு கொள்ளளவையும் எட்டியுள்ளது. இதே போல சிறுவாணி அணை ,பில்லூர் அணை, பவானிசாகர் அணை ,அமராவதி அணை, ஆழியாறு அணைகளிலும் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

கர்நாடகா மாநிலத்தில் கனமழை பொழிவதால், அங்குள்ள ஹேமாவதி அணை, கபினி அணை, கிருஷ்ணராஜ சாகர் அணை, அதன் முழு கொள்ளளவு எட்டியுள்ளதால், காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.ஒரு லட்சம் கன அடிக்கு அதிகமாக காவிரி ஆற்றில் ,தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் இன்னும் இரண்டு தினங்களில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கலாம்.

ஜூலை 13, 14 ,15 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி ,கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் குடியிருப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 16ஆம் தேதி முதல் கன்னியாகுமரி தொடங்கி சென்னை வரை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிதமான மழைப்பொழிவு கிடைக்கும். பிற்பகல் மற்றும் மாலைப்பொழுதில் ஆங்காங்கே பரவலாக மலைப்பொழிவு காணப்படும் என செயற்கைக்கோள் காட்சிகள் காட்டுகின்றன. எனவே விவசாய பெருமக்கள் விவசாய பணிகளை கவனம் செலுத்த வேண்டும் என வேளாண் பல்கலைக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. கிடைக்கும் காலத்தில் மழை நீரை சேமிப்போம். எதிர்காலத்தில் நீர் பஞ்சமில்லாமல் வாழ்வோம். நீர் நிலைகளில் கழிவு நீர் தேங்காமல் தூர்வாரி மழை நீரை சேமிப்போம் மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *