கோவை. நவம்பர். 15-

கோவையில் தொழில் தொடங்க முன் வரும் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடனுதவி வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை, சுய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற நோக்கத்துடன் மாவட்ட நிர்வாகம், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.அந்த வகையில் கலெக்டர் அலுவலகத்தின் தரைதளத்தில் செயல்படும் லைப் ரே பவுண்டேசன் தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், மகளிர் குழுவினர் சுயதொழில் செய்வதற்காக 50 ஆயிரம் ரூபாய் வரை வட்டியில்லா கடனுதவி வழங்குகிறது. திருப்பி செலுத்த ஒன்றரை ஆண்டு கால அவகாசம் தருகின்றனர்.

திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஜில் ரஹ்மான் கூறுகையில்,இந்நிறுவனம் கலெக்டர் அலுவலகத்தில் பணி துவங்கிய கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், 73 பேர் பயன் பெற்றுள்ளனர். 85 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் 132 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகள் மருத்துவ கருவிகள் வாங்கவும் உதவி அளிக்கப்படுகிறது,” என்றார்.

நிறுவன இயக்குனர் ஐஸ்வர்யா தேவ் கூறுகையில்:- ”மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், மகளிர்குழுவினருக்கு கடன் அளிப்பது மட்டுமின்றி, மெழுகுவர்த்தி செய்தல், பொம்மை செய்தல், டெய்லரிங், காளான் வளர்ப்பு போன்றவற்றுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. உற்பத்தி பொருட்களை மார்க்கெட்டிங் செய்வது தொடர்பாகவும் பயிற்சி, உதவிகள் அளிக்கப்படுகின்றன.”இது மட்டுமின்றி, புதுமையான தொழில்களை தொடங்க விரும்பும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, ரூ.20 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்க தயாராக இருக்கிறோம்,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *