கடந்த 2020 ஜூலை – செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் தங்க தேவை 94.6 டன்களாக இருந்துள்ளது.
“கொரோனா தொற்று பரவலுக்கு பின்னதாக நாட்டில் தங்கத்திற்கான தேவை பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. விழா காலம் மற்றும் வரவிருக்கும் முகூர்த்த சீசன் இந்த தேவையை அதிகரிக்க செய்யும் என நம்பப்படுகிறது. இதற்கு அடிப்படை காரணம் தொற்று பரவல் குறைந்து வருவதும், தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் தான்” என தெரிவித்துள்ளார் உலக தங்க கவுன்சிலின் இந்திய தலைமை செயல் அதிகாரி சோமசுந்தரம்.பி.ஆர். உலக அளவில் தங்கத்தை அதிகம் வாங்கிக் குவிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கொரோனா தொற்று பரவல் காரணமாக தங்கத்தின் நுகர்வு இந்தியாவில் குறைந்திருந்த நிலையில் தற்போது அதிகரித்து வருகிறது. செப்டம்பர் காலாண்டில் மட்டுமே தங்கத்தின் தேவை இந்தியாவில் 47 சதவிகிதம் அதிகரித்துள்ளது உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வலுவான நிலையில் இந்தியாவின் பொருளாதாரம் மீண்டு வருவதும், தேவை அதிகரித்து வருவதும் இந்தியாவில் ஜூலை – செப்டம்பர் காலாண்டில் தங்கத்திற்கான தேவை 139.1 டன்களாக உயர காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா தொற்று பரவலுக்கு முன்னதாக இருந்த டிமெண்ட் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.